க்ரைம்

சென்னையில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு 46 பேரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த பெண் முகவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வீடுகளை வாடகைக்கு எடுத்து, அவற்றை குத்தகைக்கு விட்டு 46 பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக பெண் முகவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் தருமன். இவர் குத்தகைக்கு (லீஸ்) வீடு தேடிய போது வீடு புரோக்கர் மூலம் நீலாங்கரை, ரெங்காரெட்டி கார்டன் 2-வது தெருவில் வசிக்கும் நிகமத் நிஷா (52) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. நிகமத் நிஷா, சின்ன நீலாங்கரையில் தான் புரோக்கர் அலுவலகம் நடத்தி வருவதாகவும், தான் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் வீடு காலியாக உள்ளதாகவும், ரூ.7 லட்சம் கொடுத்தால் ஒப்பந்தம் செய்து கொண்டு நீங்கள் அந்த வீட்டில் குத்தகைக்கு குடியேறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தருமன் ரூ.7 லட்சம் கொடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் குடியேறியுள்ளார். அதன் பிறகுதான், அந்த வீட்டின் உரிமையாளர் நிகமத் நிஷா இல்லை என்பதும், அவர் வேறு ஒருவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை உரிமையாளருக்கு தெரியாமல் தருமனுக்கு குத்தகைக்கு விட்டு பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல் மேலும் 46 பேரிடம் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மொத்தம் ரூ.3 கோடி வரை வாங்கி இதே பாணியில் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது நிகமத் நிஷா மாயமானார். இந்த விவகாரம் தொடர்பாக தருமன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் நடத்திய விசாரணையில் மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிகமத் நிஷாவை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT