கொலை செய்யப்பட்ட கோமதி. கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஸ்டீபன்ராஜ். 
க்ரைம்

திருநின்றவூர் நகராட்சி விசிக பெண் கவுன்சிலர் கொலை: கணவர் உட்பட மூவர் கைது - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருநின்றவூர் நகராட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (32). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி (28), திருநின்றவூர் நகராட்சியின் 26-வது வார்டு உறுப்பினராகவும் (விசிக), நகராட்சி வரி விதிப்புக் குழு தலைவராகவும் இருந்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்டீபன்ராஜ்- கோமதி தம்பதிக்கு 3 ஆண், ஒரு பெண் என 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கோமதிக்கு, சமூக வலைதளம் மூலம் திருநின்றவூர் - முத்தமிழ் நகரை சேர்ந்த ரவுடி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த அறிமுகம், நாளடைவில் நட்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஸ்டீபன்ராஜுக்கும், கோமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இச்சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டீபன்ராஜ், கோமதியை அதே பகுதியில் வசிக்கும் அவரது சித்தி வீட்டில் விட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோமதி, தன் சித்தி வீட்டில் இருந்து வெளியேறி, திருநின்றவூர் சிடிஎச் சாலைக்கு சென்று, ஆட்டோவில் ஏறி ஆவடி நோக்கி சென்றுள்ளார்.

இதைப் பார்த்த ஸ்டீபன்ராஜின் தம்பி அஜித் (25), ஸ்டீபன்ராஜுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரைப் பின் தொடர்ந்து மற்றொரு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, ஆவடி சோதனை சாவடி அருகே கோமதி, ரவுடியுடன் காரில் செல்ல முயன்றதை பார்த்த அஜித், அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அங்கு கூட்டம் கூடியதால், ரவுடி காரில் தப்பிச் சென்றார். பிறகு மோட்டார் சைக்கிளில், தனது உறவினரான, திருநின்றவூர் ராமதாசபுரத்தைச் சேந்த ஜான்சன் என்கிற அந்தோணிராஜ் (25) உடன் சம்பவ இடம் விரைந்த ஸ்டீபன்ராஜ், மனைவி கோமதியை ஆட்டோவில் அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் அஜித்தும், அந்தோணிராஜும் சென்றனர்.

நள்ளிரவு 11 மணியளவில், திருநின்றவூர்- ஜெயராம் நகர் பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கி கோமதியும், ஸ்டீபன்ராஜும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து ஸ்டீபன்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை குத்தினார். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த திருநின்றவூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஸ்டீபன்ராஜ், கொலை சம்பவத்தின்போது, உடனிருந்த அஜித், அந்தோணிராஜ் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT