மதுரை: மேலூர் அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணின் காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தெற்கு தெரு கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி தீபன்ராஜ் (25) என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபன்ராஜும், அந்த இளம்பெண்ணும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு தீபன்ராஜின் நண்பர்களான
மதன் (25), திருமாறன் (24) ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் தீபன்ராஜுடன் சேர்ந்து, அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அங்கிருந்து தப்பிய இளம்பெண், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீபன்ராஜ், மதன், திருமாறன் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு மூவரையும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.