க்ரைம்

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.50 லட்சம் நகை, பணம் கொள்ளயடித்த வழக்கில் 6 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகை, பணத்தை கொள்ளையடித்த 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சோமு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (64). நகை வியாபாரம் செய்துவரும் இவர், நகைக்கடையும் வைத்துள்ளார். இவர் கடந்த 26-ம் தேதி சென்னை சவுகார்பேட்டையில் நகைகளை கொள்முதல் செய்துவிட்டு இரவு 7.40 மணியளவில் எழும்பூர், பாந்தியன் சாலையில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் ரூ.31 லட்சத்து 39 ஆயிரம் என மொத்தம் ரூ.50 லட்சம் பணம், நகை அடங்கிய பையுடன் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது, அங்கு காரில் வந்த கும்பல் ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தியது. பின்னர் அவரது வாயில் துணியை வைத்து திணித்து, கை, கால்களை கயிற்றால் கட்டி கத்திமுனையில் அவரிடமிருந்த நகை, பணம் அடங்கிய பையை பறித்தது. பின்னர், அவரை போரூர் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியது.

அதிர்ச்சி அடைந்த அவர் பயத்தில் உடனடியாக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். பின்னர் நண்பர்கள், உறவினர்களிடம் ஆலோசித்து 3 நாட்களுக்கு முன்பு சென்னை வந்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தலைமறைவான கொள்ளையர்களைப் பிடிக்க திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நகை வியாபாரி ரவிச்சந்திரனை கடத்தி கொள்ளையில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்ற கமல் (36), அதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (45), தீனா என்ற தினகரன் (36), பிரேம்குமார் (38), முத்துலிங்கம் (42), மதுரை மேலூரைச் சேர்ந்த பிரபு (42) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த 6 பேரையும் சிவகங்கை மற்றும் மானாமதுரையில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், வெள்ளி கட்டிகளுடன் 3.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், பணம் ரூ.6.50 லட்சம் மீட்கப்பட்டது. குற்றச் சம்பவத்துக்கு பயன்படுத்திய 7 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாரின் விசாரணையில், நகை வியாபாரி ரவிச்சந்திரன் வாரத்தில் 3 நாட்கள் சென்னைக்கு வந்து நகைகளை வாங்கிவிட்டு ஆட்டோவில் எழும்பூர் சென்று, அங்கிருந்து தனியார் பேருந்தில் காரைக்குடிக்கு செல்வதை வழக்கமாகக் வைத்திருந்துள்ளார். இதை நோட்டமிட்ட 6 பேர் கும்பல் ரவிச்சந்திரனை காரில் கடத்தி நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளது. இக்கும்பல் இதேபோல், சிவகங்கையிலும் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT