க்ரைம்

போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: கொகைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த ஜூன் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இதே வழக்கில் நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் சப்ளையர் கெவின் ஆகியோர் 26-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

‘எங்களுக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும், பதுக்கி வைத்திருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எங்களிடம் இருந்து எந்த போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது’ என மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி ஹெர்மிஸ் முன்பு நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT