க்ரைம்

கடன் தொல்லையால் தவெக தொண்டர் தற்கொலை - விஜய்க்கு எழுதிய கடிதத்தில் உருக்கம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கடன் தொல்லையால் தவெக தொண்டர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கந்து வட்டிக்கொடுமை என நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுச்சேரி கொசப்பாளையம் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் விக்ரம் என்ற விக்ரமன் (34). இவருக்கு மேரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். வாகன ஓட்டுநரான விக்ரமன் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனை திரும்ப கேட்பவர்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் சொந்த வீட்டை விட்டு கொசப்பாளையம் பிள்ளையார் கோயில் வீதியில் வாடகை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கும் கடன் கொடுத்தவர்கள் வந்து கடனை திரும்ப கேட்டுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட விக்ரமன் தவெக தொண்டர் என்றும், தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு கைப்பட கடிதம் ஒன்றும் எழுதி உள்ளார்.

மரண வாக்குமூலம் என அதில் குறிப்பிட்டு கந்து வட்டிக்கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அக்கடிதத்தில், “விஜய் அண்ணாவுக்கு என் கடைசி ஆசை. இந்த மாதிரி 15 சதவீதம் வரை வட்டி விட்டு சித்ரவதை செய்யும் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை தேவை. இதுபோல் வட்டிக்கு விட பயப்படவேண்டும். என் குழந்தை படிப்புக்கு உதவ வேண்டும். உங்களை நம்பி உயிரை விடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT