நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி பி-2 பிளாக் மாற்று குடியிருப்பு ஐந்தாவது தெருவில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன் (63). இவர், ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் ஆவார்.
ஒய்வுக்குப் பின் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி (55). இருவரும் வேறொருவருடன் திருமணம் ஆகி பிரிந்து, பின் இந்த மண வாழ்வில் இணைந்தவர்கள். கொளஞ்சியப் பனுக்கும் பத்மாவதிக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஓரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கொளஞ்சியப்பனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கூடா நட்பு இருந்ததாக பத்மாவதிக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதுதொடர்பாக நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பத்மாவதி புகார் அளித்திருந்தார். இதனால் கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொளஞ்சியப்பன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது பத்மாதி கொளஞ்சியப்பனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இறந்த உடலுடன் நேற்று விடியற்காலை வரை பத்மாவதி அங்கேயே இருந்துள்ளார். விடிந்ததும் உறவினர்களுக்கு போன் செய்து, தனது கணவனை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார். உறவினர்கள் வந்து பார்த்த போது கொளஞ்சியப்பன் கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொளஞ்சியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பத்மாவதியை கைது செய்து, நெய்வேலி நகர காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.