க்ரைம்

திமுக எம்.பி மகன் மீது மதுரை காவல் ஆணையரிடம் பெண் புகார்

செய்திப்பிரிவு

தனது கணவர், மகன் மீது பொய் புகார் அளித்ததாக திமுக எம்பி மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சமயமுத்து தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அர்ச்சனை தேங்காய், பழக்கடை நடத்துகிறார். ஜூலை 1-ம் தேதி மதுரையைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் கடைக்கு வந்துள்ளார். தேங்காய் பழத்தட்டு வாங்கிய போது, எனது கணவர், மகன், ஊழியர்களுடன் தகராறு செய்து தாக்கியுள்ளார்.

இது செல்போனில் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. நிஷாந்த் மீது உரிய நடவடிக்கை கோரி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் எனது கணவர் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் மனு ரசீது கொடுக்கவில்லை. எனது கணவரை யும், மகனையும் தாக்கியவர் வழக்கறிஞர் என்பதாலும், அவரது தந்தை திமுகவின் தேனி எம்பி என்பதை தெரிந்துகொண்டு நிஷாந்துக்கு சாதகமாக போலீஸார் செயல்பட்டுள்ளனர்.

நிஷாந்த் தரப்பில் போலி புகாரை பெற்று எனது கணவர், மகன் மீதும் பொய் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இருவரது செல்போன்களையும் பறிமுதல் செய்ததோடு, கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை எடுத்துச் சென்று உண்மையான தடயங்களை மறைத்துள்ளனர். என்னுடைய கணவர், மகனை தாக்கிய நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT