உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காமாட்சி 
க்ரைம்

ராசிபுரம் அருகே காவல் நிலைய ஓய்வறையில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு: எஸ்பி விளக்கம்

செய்திப்பிரிவு

ராசிபுரம் அருகே காவல் நிலைய ஓய்வறையில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். இந்நிலையில், பணிச் சுமை காரணம் என சமூக வலைதளத்தில் பரவிய தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகக் காமாட்சி (48) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி நேரம் முடிந்து நேற்று (2-ம் தேதி) அதிகாலை காவல் நிலையத்துக்கு வந்து முதல் மாடியில் உள்ள ஓய்வறையில் ஓய்வு எடுத்துள்ளார். நேற்று காலை 11.30 மணி வரை ஓய்வு நேரம் முடிந்தும் அவர் பணிக்கு வரவில்லை.

இதையடுத்து, ஓய்வறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த காமாட்சிக்குக் கடந்த 3 மாதங்களில் 40 நாட்கள் மருத்துவ விடுப்பும், 2 நாட்கள் சாதாரண விடுப்பும், 3 நாள் அனுமதி விடுப்பு, ஒரு நாள் திருமண நாள் சிறப்பு விடுப்பும் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, சில சமூக வலைதளங்களில் பெண் சிறப்பு காவல் உதவியாளர் காமாட்சிக்கு விடுப்பு வழங்காததால் பணிச் சுமை அதிகரித்து, உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு மாறானது. அவரது உயிரிழப்பு குறித்து விசாரணை முடிவில் முழு விவரம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT