பெரியகுளம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்ட காட்சி பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் தாக்கப்படும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-01-2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்துக்கு விண்ணப்பித்தார்.
இந்நிலையில் அவருக்கு அந்த சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தனது கட்சிக்காரருடன் தான் சென்று புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவரை போலீஸார் பிடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருந்துள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் தாக்கப்பட்டவர் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆவார். மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் சாலையில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக விசாரணைக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.
திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்ட வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மீது நடந்த தாக்குதல் காட்சியும் சமூக வலைதளங்கில் பரவி வருகிறது.