சிவகங்கை: 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாக முகுந்தன்குடியைச் சேர்ந்த விவசாயி சமையன் (45). இவர் 2013ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் யாசகம் எடுத்த 8 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதேபோல், அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர்கள் சையது அபுதாஹிர் (31), முகமது ரியாஸ் (29) முகமது யாசின் (30), நவ்ஷத் அலிகான் (33) ஆகியோரும் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் கடந்த 2013 மார்ச்சில் வழக்குப் பதிந்து, சமையன், சையது அபுதாஹிர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நடைபெற்று வந்த போது முகமது யாசின் உயிரிழந்தார். மற்ற 4 பேர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.
குற்றம்சாட்டப்பட்ட சமையனுக்கு சிறுமியை கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது, சிறுமியை அடைத்து வைத்திருந்தது, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது ஆகிய 4 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து நீதிபதி பார்த்த சாரதி தீர்ப்பளித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், சையது அபுதாஹிர், முகமது ரியாஸ், நவ்ஷத் அலிகான் ஆகிய மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் தலா ரூ.3,000 அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார் ஆஜரானார்.