காதலை முறித்த ஆத்திரத்தில், அண்ணா பல்கலை. மாணவியை மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை படித்து வரும் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில், கடந்த 2020 - 24-ம் ஆண்டு வரை சோழிங்க நல்லூரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த புதுக்கோட்டையை சேர்ந்த ராம்குமார் (22) என்பரை காதலித்து வந்தேன். பின்னர், கல்லூரி படிப்பை முடித்து விட்டு, அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுகலை பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். ராம் குமார் புனேவில் வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், அவரது நடவடிக்கை சரியில்லாததால், அவருடன் பழகுவதை தவிர்த்துவிட்டேன். காதலையும் முறித்துவிட்டேன். இதனால், ஆத்திரம் அடைந்த அவர், காதலை தொடரும்படி வற்புறுத்தி வந்தார். நான் ஏற்காததால், நாங்கள் காதலித்த போது, இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் ராம் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.