சேத்துப்பட்டு மாநகராட்சி பள்ளியில், வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்த போது, வேதி பொருள் கொட்டி 8-ம் வகுப்பு மாணவர் படுகாயம் அடைந்தார்.
சென்னை, சேத்துப்பட்டு, மெக்னிக்கல் சாலையில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சேத்துப்பட்டு, எம்.எஸ்.நகரை சேர்ந்த சந்தியா என்பவரது மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25-ம் தேதி பள்ளியில் வேதியியல் ஆய்வகம் சுத்தம் செய்யும் பணி நடந்துள்ளது. அப்போது, ஆய்வகத்தில் இருந்த வேதிப் பொருட்கள் சாக்கு மூட்டையில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சாக்கு மூட்டையை தூக்கி சென்று, மற்றொரு இடத்தில் வைக்கும் படி ஆசிரியர், அந்த மாணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த மாணவர், சாக்கு மூட்டை தூக்கி சென்றுள்ளார். அப்போது, மூட்டையினுள் இருந்த வேதிப் பொருள் பாட்டில் உடைந்து, மாணவரின் உடலில் கொட்டியது. இதில் மாணவரின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டுக்கு சென்ற மாணவர், இது குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளான். அதிர்ச்சி அடைந்த மாணவரின் தாய், உடனடியாக மாணவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாநகராட்சி பள்ளி நிர்வாகத்திடம் சந்தியா கேட்டபோது, அவர்கள் முறையான தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, சந்தியா, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியர் மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.