சென்னை: காரில் தப்பிச் சென்ற ரவுடியை பிடிக்க, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுமார் ஒரு கி.மீட்டர் தூரம் காரிலேயே தொங்கியபடி சென்றுள்ளார். அவரை ரவுடி கீழே தள்ளிவிட்ட நிலையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த ரவுடியான அழகுராஜா நீதிமன்ற பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து ஜாம்பஜார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தலைமை காவலர் சங்கர் தினேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் அழகுராஜாவை பிடிக்க பைக்கில் ஹெல்மெட் அணிந்து திருப்பாச்சூர் பகுதிக்கு சென்றனர்.
அப்போது, திருப்பாச்சூர் பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காரில் அழகுராஜா சென்று கொண்டிருந்தார். பைக்கில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், கார் கதவை இறுகப் பிடித்து, தொங்கியவாறு காரில் இருந்த சாவியை எப்படியாவது எடுத்து அழகுராஜாவை பிடித்துவிட முயற்சி செய்தார்.
சுமார் ஒரு கி.மீட்டர் தூரம் வரை காரில் தொங்கியவாறு சென்ற ஆனந்தகுமாரை, காரில் இருந்த அழகுராஜா அடித்து கீழே தள்ளினார். இதனால், சாலையில் விழுந்த ஆனந்தகுமார் ஹெல்மெட் அணிந்திருந்ததால், சிராய்ப்பு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுகுறித்து, ஆனந்தகுமார் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தந்தையை கொன்றவரை பழிதீர்த்த மகன்: பிரபல ரவுடியான தோட்டம் சேகர் மேடை பாடகராகவும், அரசியல் கட்சியிலும் இருந்தார். அவர் 2001-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். ரவுடியான மயிலாப்பூர் சிவக்குமார், தோட்டம் சேகரை தீர்த்து கட்டியிருந்தார். தந்தை கொலைக்கு எப்படியாவது பழிவாங்கியே தீர வேண்டும் என தோட்டம் சேகரின் 3-வது மனைவி மலர்கொடி, தன் மகன் அழகுராஜாவுக்கு சொல்லி சொல்லி வளர்த்து வந்தார்.
இந்நிலையில், தாயாரின் ஆசையை நிறைவேற்றும் வகையிலும், தந்தையை கொலை செய்தவரை பழி தீர்க்கும் வகையிலும் கூலிப்படையினர் உதவியுடன் ரவுடி மயிலை சிவக்குமாரை கடந்த 2023-ம் ஆண்டு வானகரத்தில் வைத்து அழகுராஜா தீர்த்துக் கட்டினார்.
அவர் மீது இந்த கொலை வழக்கு உட்பட மொத்தம் 15 குற்ற வழக்குகள் உள்ளன. அழகுராஜாவின் தாய் மலர்கொடி தற்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.