வீடியோ வெளியிட்ட அர்ச்சகர்கள். 
க்ரைம்

ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சை: தலைமறைவான அர்ச்சகர்கள் சமூக வலைதளத்தில் கதறல்

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் மது போதையில் ஆபாசமாக நடனமாடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அர்ச்சகர்கள் இருவர், அவதூறு வீடியோவால் தங்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் மற்றும் அர்ச்சகர்கள் சிலர், வீட்டில் ஆபாசமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை கோயிலில் இருந்து நீக்கியும், பூஜை செய்ய தடை விதித்தும் அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இது தொடர்பாக கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம்(30), தற்காலிக அர்ச்சகர்கள் வினோத்(32), கணேசன்(38) மற்றும் வீடியோவை வெளியிட்ட சபரிநாதன்(38) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் எங்களைப் பற்றிய அவதூறு வீடியோ பரவி வருகிறது. எங்கள் நண்பரான பெரிய மாரியம்மன் கோயில் முன்னாள் அர்ச்சகர் கோமதி விநாயகம் வீட்டில் மது அருந்தி விட்டு நடனம் ஆடுவதாக வீடியோ வெளியாகியுள்ளது.

எங்களுக்கு தொடர்பு இல்லாத, 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோவுடன் இணைத்து, கோயிலில் மது அருந்தி விட்டு நடனமாடியதாக தகறான தகவல்கள் பரவுகின்றன. கோயிலின் முன்னாள் அர்ச்சகரான ஹரிஹரன் மகன் சபரிநாதன் என்பவரால் இது பரப்பப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் நாங்கள் பணியாற்றக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன், சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்துள்ளோம். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT