நடிகர் கிருஷ்ணா | கோப்புப்படம் 
க்ரைம்

“எனக்கு எதிராக ஆதாரம் இல்லை!” - போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் காவல் துறை விசாரணை நடத்தினர். இதில், போதைப் பொருள் சப்ளையரான கெவினிடம் அவர் நீண்ட காலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், அவர் அதை தனது நண்பர்களுக்கும் கொடுத்து பழக்கி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவல் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் கிருஷ்ணா சென்னை போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தனக்கும் இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னை தவறாக காவல் துறை கைது செய்துள்ளனர். நான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரம் இல்லை.

வழக்கில் தொடர்புடைய எந்த போதைப் பொருள்களும் என்னிடம் இருந்து காவல் துறை கைபற்றவில்லை. நான் எந்த போதைப் பொருளும் பயன்படுத்தவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாத் உள்ளிட்ட யாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேபோன்று நடிகர் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டு உள்ளேன். கெவின் என்பவருக்கும் எனக்கும் அண்மைக் காலங்களில் எந்த தொடர்பும் இல்லை.

கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு அவருடன் எந்த நட்பும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நான் வெளியேறி விட்டோன். அதன்பிறகு எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பழைய வாட்ஸ்அப் குழுவை வைத்து எனக்கு எதிராக காவல்துறை இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனையும் நான் ஏற்க தயாராக இருக்கிறேன்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

SCROLL FOR NEXT