| உள்படம்: முத்துபாலகிருஷ்ணன் | 
க்ரைம்

குறுக்குச்சாலை அதிமுக நிர்வாகி கொலை: திமுக நிர்வாக உட்பட 3 பேர் போலீஸில் சரண்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி/ சென்னை: கோவில்பட்டி அருகே அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுக நிர்வாகி உட்பட மூன்று பேர் போலீஸில் சரணடைந்தனர். இதனிடையே, அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவில்பட்டி குறுக்குச்சாலை அருகே கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்துபால கிருஷ்ணன் (56). அதிமுக கிளைச்செயலாளராக பதவி வகித்தார்.

மேலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 24-ம் தேதி முத்துபாலகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் கொல்லம்பரும்பு கிராமத்திலிருந்து குறுக்குச்சாலைக்கு சென்றபோது, சந்திரகிரி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் முத்துபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, முத்துபால கிருஷ்ணனின் மனைவி வள்ளியம்மாள் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, டிப்பர் லாரி ஓட்டுநர் கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் (40) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக, கொல்லம்பரும்புவைச் சேர்ந்த கருணாகரன், மகேஷ், கற்பகராஜ் ஆகியோரைப் பிடிக்க, மணியாச்சி டிஎஸ்பி அருள்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் அவர்கள் 3 பேரையும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பெருமாள் மகன் கருணாகரன் (40), சந்தனராஜ் மகன் மகேஷ் (27), சுப்பையா மகன் கற்பகராஜ் (30) ஆகிய 3 பேரும் டிஎஸ்பி அருள் முன்பு நேற்று சரணடைந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள கருணாகரன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பதும், இவரது தாய் சந்திரா 22 ஆண்டுகளாகவும், அவரைத் தொடர்ந்து கருணாகரனின் மனைவி கவுரி 3 ஆண்டுகளாகவும் கொல்லம்பரும்பு ஊராட்சி தலைவராக இருந்தனர் என்பதும் குறிப் பிடத்தக்கது.

பழனிசாமி கண்டனம்: இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணனை திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா? திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்துக்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை.

ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பழனிசாமிக்கு அமைச்சர் கண்டனம்: இக்கொலை தொடர்பாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி கொல்லம்பரம்பு கிராமத்தில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான 650 ஏக்கர் நிலத்தை சவுந்திர ராஜன் அனுபவித்து வந்துள்ளார். அந்த நிலத்தில் கல் குவாரி இருப்பதால் அதை வைத்து டிப்பர் லாரி மூலம் பொருட்களை விற்கும் தொழிலை சவுந்திரராஜன் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அதிமுக பிரமுகர் முத்துபாலகிருஷ்ணன் அந்த நிலத்தை மற்றொருவருக்கு விற்பனை செய்து பால்ராஜிடம் பணத்தை கொடுத்துள்ளார். தான் அனுபவித்து வந்த நிலத்தை தனக்கு தகவல்கூட தெரிவிக்காமல் விற்பனை செய்து ஏமாற்றியதாக கருதிய சவுந்திரராஜன், முத்துபாலகிருஷ்ணனை கொலை செய்துள்ளார். இவரது மரணத்துக்கு காரணம் அவர் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொழில்.

இந்நிலையில் "திமுக ஆட்சியில் அதிமுக பிரமுகரை கொலை செய்தது திமுக பிரமுகர்" என்று பேசினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற தீய எண்ணத்தில் பழனிசாமி இந்த விவகாரம் பற்றி அவதூறை விதைக்க முயற்சிக்கிறார். "சட்டம் ஒழுங்கு சரியில்லை" என்ற அவதூறுக்கு ஆதாரம் தேடி தோற்றுப்போன பழனிசாமி இந்த சம்பவத்தை கையிலெடுத்துள்ளார். இதிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT