திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்குடி அருகே உள்ள வெட்டிக்காடு கீழத்தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (85). இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆனந்த்பாபு (32), இவரது தாயார் மலர்கொடி (70). ஆனந்த்பாபு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளராகவுள்ளார். மலர்கொடி, முத்துலட்சுமி இடையே வீட்டின் அருகே ஆடு கட்டுவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஜூன் 24-ம் தேதி முத்துலட்சுமி, மலர்கொடி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு மதுபோதையில் வந்த ஆனந்த்பாபு கட்டையால் தாக்கியதில், முத்துலட்சுமிக்கு கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் முத்துலட்சுமியை மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆனந்த்பாபு, அவரது தாய் மலர்கொடி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், ஆனந்த்பாபுவை கைது செய்த வடுவூர் போலீஸார், அவரை இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மலர்கொடியை தேடி வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கம்: இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஆனந்தபாபு (திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.