வெட்டி கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன் 
க்ரைம்

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கின் விசாரணை நிலவரம் என்ன? - திருப்பூர் காவல் துறை விவரிப்பு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை தேடி வருவதாக மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருப்பூர் குமரானந்தபுரம் இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன் (30) என்பவரை நேற்று அதிகாலை நேரத்தில் வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முன்னாள் இந்து முன்னணி பிரமுகரான சுமன் (34) மற்றும் அவரது நண்பரான திருப்பூரை சேர்ந்த தமிழரசன் (26) ஆகியோரை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வீட்டின் அருகே பாலமுருகன் அரிவாளால் கொலை செய்யப்பட்டபோது, அங்கிருந்த நரசிம்ம பிரவின் (29) மற்றும் அஸ்வின் (29) ஆகியோரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படை வால்பாறைக்கு சென்றுள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறும்போது, “சுமனுக்கும், பாலமுருகனும் இந்து முன்னணியில் இருந்து வந்த நிலையில், பதவி தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.

தற்போதைய சுமனின் அமைப்பு பொறுப்பில்தான் பாலமுருகன் இருந்து வந்தார். அவ்வப்போது சின்னஞ்சிறிய பிரச்சினைகள் எழும். இந்நிலையில், சுமன் இந்து முன்னணியில் இருந்து வெளியேறி, இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். கொலை நிகழ்ந்த சம்பவ இடத்தில் இருந்த நரசிம்ம பிரவின் மற்றும் அஸ்வின் ஆகிய 2 பேரை தேடி வருகிறோம். அஸ்வின் வாகனத்தை ஒட்டிக்கொண்டுவர, அதில் வந்த நரசிம்ம பிரவின் மட்டும் பாலமுருகனை வெட்டுகிறார்.

தலைமறைவான 2 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். அதேபோல் குமரானந்தபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மது போதையில் பலர் வலம் வருவது தொடர்பாக புகார்கள் வருகின்றன. அதனை களையும் வகையில், இரவு ரோந்தில் போலீஸார் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். தனிப்படை போலீஸாரால் தேடப்படும் நரசிம்ம பிரவின் மீது கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT