திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையோரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கும்பல் ஒன்று 2 நாட்டு வெடி குண்டுகள் வீசி, அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் அடுத்த மப்பேடு பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தரப்பை சேர்ந்த ஆகாஷ் என்பவரின் காது அறுந்தது. இந்நிலையில், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று இரவு மப்பேடு அருகே இருளஞ்சேரி கிராமத்தில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கும்பல் ஒன்று இரு நாட்டு வெடி குண்டுகளை வீசியது. இச்சம்பவத்தில் முகேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெடிகுண்டு வீசிய கும்பல், கத்தி மற்றும் அரிவாளால் ஜாவித் மற்றும் தீபன் ஆகிய இருவரை வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள மப்பேடு போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ஆகாஷ் என்பவரின் காதை அறுத்த விவகாரம் தற்போது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு மாறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 5 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.