சென்னை: வேலை செய்த வீட்டிலேயே நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட மேற்குவங்க இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
நொளம்பூர் அண்ணாமலை அவென்யூ பகுதியில் வசிப்பவர் ரங்கராஜ் (65). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் சென்னை முகப்பேரில் வசிக்கும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிங்குமுகர்ஜி (23) என்ற இளம் பெண் கடந்த ஜூன் 8-ம் தேதி வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ரங்கராஜ் கடந்த 23-ம் தேதி வீட்டு பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரிபார்த்தார். அப்போது அதிலிருந்த 14 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.50 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் வீட்டில் வேலை செய்து வந்த ரிங்குமுகர்ஜி என்ற பெண்ணே ரங்கராஜ் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.