சென்னை: விசாரணையின்போது காவல் நிலையத்தின் 2-வது மாடியிலிருந்து குதித்து தப்ப முயன்ற உத்தர பிரதேச இளைஞர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி எஸ்ஐ, தலைமைக் காவலரை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சென்னை வேளச்சேரி விஜயநகர், 7-வது தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் புகுந்து திருட முயன்றதாக கடந்த 20-ம் தேதி அதிகாலை வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து சம்பந்தப்பட்ட இளைஞரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-வது தளத்தில் வைத்து அந்த இளைஞரிடம், குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர், உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது.
கழிப்பறைக்கு செல்வதாகக் கூறி வெளியே வந்த அந்த இளைஞர் தப்பிச் செல்லும் நோக்கத்துடன், 2-வது தளத்தின் அருகே இருந்த மரத்தை பிடித்து கீழே இறங்குவதற்காக குதித்துள்ளார். மரத்தின் கிளை முறிந்ததால் 2-வது தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த அந்த இளைஞரை மீட்டு, மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க பணியின்போது அலட்சியமாக இருந்ததாக வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்ஐ ஜம்புலிங்கம், காவலர் ஜெகதீசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்தார்.