நடிகர் கிருஷ்ணா | கோப்புப்படம் 
க்ரைம்

போதைப் பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

‘கழுகு’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி நுங்கம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் தலைமறைவானார். செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 25) மாலை நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தான் எந்த வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை என உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னரே போதைப்பொருள் பயன்படுத்தினாரா, இல்லையா என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘தீங்கிரை’ படத்தை தயாரித்த காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆகிய 3 கட்சிகளிலும் முன்பு தகவல் தொழில் நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கமானதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT