திருவள்ளூர்: திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் 3 பெண்களை தாக்கியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமைg காவலரை இன்று (ஜூன் 25) காலை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் (35), சிவாஜி (38). இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகம்மாசத்திரம் பகுதியில் நின்றபோது, அவர்களை கனகம்மாசத்திரம் பகுதியில் வசிக்கும் மதுமிதாவும், அவரது நண்பரான கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனும், சாதி பெயரை சொல்லி திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அருணும், சிவாஜியும் கடந்த 22-ம் தேதி கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த மதுமிதா, கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த தன் தோழிகளான, கர்ப்பிணி பெண்ணான செவ்வந்தி (25), தனம் (28) ஆகியோருடன் நேற்று முன் தினம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்துக்கு அருண், சிவாஜிக்கு எதிராக புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் ராமனிடம், மதுமிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த தலைமைக் காவலர் ராமன், மதுமிதா, செவ்வந்தி, தனம் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை, மதுமிதாவின் தோழிகள் மொபைல் போனில் காணொலியாக பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல், தலைமைக் காவலர் ராமன் தாக்கியதால் காயமடைந்த மதுமிதா, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இதற்கிடையே தலைமைக் காவலர் ராமன், மதுமிதா உள்ளிட்டோரை தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தலைமைக் காவலர் ராமனை நேற்று மாலை திருவள்ளூர் எஸ்.பி சீனிவாச பெருமாள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, கனகம்மாசத்திரம் போலீஸார், நேற்று இரவு தலைமைக் காவலர் ராமன் மீது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியர் சட்டத்தை மீறுதல், பெண்ணை துன்புறுத்துதல் ஆகியவை தொடர்பான 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பிறகு, இன்று காலை தலைமைக் காவலர் ராமனை போலீஸார் கைது செய்தனர்.