சென்னை: பக்கத்து வீட்டு பைக்கை திருடிக் கொண்டிருந்த திருடனை தோல் வியாபாரி பிடித்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், மசூதி தெருவில் வசிப்பவர் தோல் வியாபாரி நியாமத்துல்லா (44). இவர் கடந்த 21-ம் தேதி அதிகாலை வியாபாரத்துக்கு செல்ல வீட்டுக்கு வெளியே வந்தபோது, அவரது வீட்டுக்கு எதிரே வசிக்கும் ஷேக் உஸ்மான் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை ஒருவர் உடைத்து திருட முயன்று கொண்டிருந்தார்.
இதனை கவனித்த நியாமத்துல்லா, இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் ஷேக் உஸ்மானை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருட முயன்றவரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து புளியந்தோப்பு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் நிகழ்விடம் விரைந்து பிடிபட்ட நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பிடிபட்டவர் புளியந்தோப்பு, திருவிக நகரைச் சேர்ந்த சம்சுதீன் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சம்சுதீன் மீது ஏற்கெனவே புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.