க்ரைம்

22 கடல் குதிரைகள், 34 சுறா துடுப்புகள் பறிமுதல், இருவர் கைது: திண்டிவனம் வனத்துறையினர் அதிரடி

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம்: மரக்காணம் அருகே 22 கடல் குதிரைகளை கடத்தியது மற்றும் கடலூரில் கைவினை பொருள் விற்பனை நிலையத்தில் 34 சுறா துடுப்புகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமம், கோனவாயன்குப்பம் ஐயனார் கோயில் அருகே திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையிலான வனத்துறையினர் இன்று (ஜுன் 24-ம் தேதி) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் முகமது இஸ்மாயில்(59) என்பதும், கடலூர் முதுநகர் கின்ஜாம்பேட்டை நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவரிடம் இருந்த பையில் உயிரிழந்த நிலையில் 22 கடல் குதிரை இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கடலூர் முதுநகரில் உள்ள சோ.நகரில் வசிக்கும் முகமது உசேன் மகன் எம்.எச்.அகமதுடன் (34) இணைந்து, கடல் குதிரைகளை கடத்தி விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடலூர் முதுநகரில் இருவரும் இணைந்து நடத்தி வரும் கைவினை பொருள் விற்பனை செய்யும் கடையை வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில், 34 எண்ணிக்கையில் சுறா துடுப்புகளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து திண்டிவனம் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமது இஸ்மாயில், அகமது ஆகியோரை கைது செய்து, திண்டிவனம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து உயிரிழந்த நிலையில் 22 கடல் குதிரைகள், 34 சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT