திருச்சி: கேரளா மாநிலம் இடுக்கி வரையாற்றுமண்டி எல்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் டோனட் ஜோசப் (37). இவரது மனைவி அமர்லியா அலெக்ஸ் (34). இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதுமணத் தம்பதியர் இருவரும் காரில் வேளாங்கண்ணி சென்றுவிட்டு இன்று அதிகாலை கேரளாவுக்குப் புறப்பட்டனர்.
இவர்கள், திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே அரை வட்டச் சுற்றுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே சென்ற கன்டெய்னர் லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி நசுங்கி, டோனட் ஜோசப் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அமர்லியா அலெக்ஸ் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து துவாக்குடி போலீஸார், திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சென்று நசுங்கியிருந்த காரில் இருந்து டோனட் ஜோசப் உடலையும், அமர்லியா அலெக்ஸையும் போராடி மீட்டு, துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அமர்லியா அலெக்ஸுக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இது குறித்து துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.