கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை மாளிகைப்பாறை பழைய கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (42). கறவை மாடுகளை வளர்த்து வருவதுடன், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயா (38). இவர்களது குழந்தைகள் சந்தீப் (12), ஐஸ்வர்யா (9).
ராஜா தனது பெற்றோரிடம் பேசினால், ஜெயா பிரச்சினை செய்து கணவனை அடிக்கடி தாக்கி வந்துள்ளார். இந்நிலையில் 2023-ம் ஆண்டு ஏப். 30-ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ஜெயா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜாவை வெட்டிக் கொலை செய்தார். பின்பு கொலை செய்த தடயத்தை மறைத்துவிட்டு, ஊர் மக்களிடம் உடல்நலக் குறைவால் ராஜா இறந்துவிட்டதாகக் கூறினார்.
ராஜாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் அன்னத்தாய் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில், கணவனை ஜெயா கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞராக பாஸ்கரன் ஆஜரானார். விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், ராஜாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.