சென்னை: காதல் மனைவியுடன் வாழாமல் ஒன்றரை ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக மனைவியின் சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மேற்கு மாம்பலம், எல்ஐஜி பிளாட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் கலையரசன் (23).
கூரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி அதிகாலை அசோக் நகர்,35-வது தெருவில் நின்றிருந்தார்.அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கலையரசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலையரசன் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்த கொலை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்கு பதிந்து, அசோக் நகர், புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த சஞ்சய் (19), அவரது அண்ணன் சக்திவேல் (20), உறவினர் மேற்கு மாம்பலம் சுனில் குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இறந்துபோன கலையரசன், தமிழரசியை காதலித்து வீட்டு எதிர்ப்பை மீறி 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து ஒன்றரை ஆண்டாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
தங்கையுடன் சேர்ந்து வாழும்படி, தமிழரசியின் சகோதரர் சக்திவேல் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வெளியே வந்தனர்.
இந்நிலையில்தான் கடந்த 15-ம்தேதி தனியாக நின்றிருந்த கலையரசனை சஞ்சய் மற்றும் சுனில்குமார் தாக்கி கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.