பிரித்விராஜ் கடேல் 
க்ரைம்

காலிமனை விற்பனை செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: காலிமனை விற்பனை செய்வதாகக் கூறி பெண்ணிடம் முன்பணம் ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமிபிரியா (48).

இவருக்கு நிலத்தை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் மூலம் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் கடேல் (51) என்பவர் அறிமுகமானர். இவர் தனக்கு சொந்தமான ஆயிரம் சதுர அடி கொண்ட காலிமனையை ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக கூறினார். இதற்கு லட்சுமிபிரியாவிடமிருந்து முன்பணமாக கடந்தாண்டு ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்பு சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து பார்த்தபோது 965 சதுர அடி மட்டுமே இருந்தது. மேலும் அது அரசால் அங்கீகரிக்கப்படாத புறம்போக்கு நிலம் என்பதும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த லட்சுமிபிரியா தனக்கு நிலம் வேண்டாம், பெற்றுக் கொண்ட முன்பணத்தை திரும்ப கொடுங்கள் என கேட்டார். ஆனால், பிரித்விராஜ் கடேல் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் ரூ.5 லட்சம் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரித்விராஜ் கடேலை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT