திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. 
க்ரைம்

திண்டுக்கல்லில் மோதலில் ஈடுபட்ட பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் மோதலில் ஈடுபட்ட பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, இந்து அமைப்புகள் குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் கூறி, இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் வினோத் ராஜ், சக்தி வேல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சரத்குமார், சண்முகம் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில், ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பிலும் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காயமடைந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கந்தசாமி, பெருமாள், விஷ்ணுவர்தன், சந்தோஷ் பாண்டியன், தீபக்ராஜ், பழனிச்சாமி, ஆரோக்கிய தினேஷ்குமார், நிரூபன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஜெயந்தி அளித்த புகாரின்பேரில், பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த பாலமுருகன், ராமச் சந்திரன், சுரேஷ், பாலா, முத்து, யுவராஜா, அருண்குமார், ராஜ்குமார், ஹரிமுருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT