க்ரைம்

சென்னை மெரினாவில் அதிவேகமாக கார் ஓட்டிய ஐ.டி ஊழியரை எச்சரித்த போலீஸ்!

செய்திப்பிரிவு

மனைவியை உற்சாகப்படுத்துவதற்காக மெரினாவில் காரை அதிவேகமாக ஓட்டிய ஐடி ஊழியர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ‘இனி இதுபோல் தவறு செய்யமாட்டேன்’ என மன்னிப்பு கேட்டதால் போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர்.

மெரினாவில் நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். காலை 7 மணி அளவில் மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் நீலநிற கார் ஒன்று வேகமாக சென்றது. அந்தக் கார் முன்னோக்கியும், பின்னோக்கியும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றது. இதனைக் கண்ட மெரினா காவல் நிலைய காவலர் செல்வம், காரை மடக்கி பிடிக்க முயன்றார்.

ஆனால், அந்தக் கார் நிற்காமல், அவ்வையார் சிலை அருகே வெளியே செல்லும் பாதை வழியாக காமராஜர் சாலையில் மின்னல் வேகத்தில் சீறிபாய்ந்தது. இதுதொடர்பான காட்சியை மெரினாவில் நடைபயிற்சி மேற்கொண்ட சிலர் வீடியோ எடுத்தனர். போலீஸாரின் விசாரணையில், காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றது, மயிலாப்பூர் சிதம்பரசாமி கோயில் 3-வது தெருவைச் சேர்ந்த அபிஷேக் (25) என்பதும், அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இதற்கிடையே, கார் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்திலும், செய்தி ஊடகங்களிலும் வெளியானதைப் பார்த்த அபிஷேக், தனது மனைவி மற்றும் வழக்கறிஞருடன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஆஜரானார்.

அப்போது, போலீஸாரிடம், ‘எனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகிறது. மெரினாவில் என்னுடன் வந்த எனது மனைவி மற்றும் நண்பரை உற்சாகப் படுத்த காரை வேகமாக இயக்கினேன். போலீஸார் என்னை பிடிக்க முயன்றதால் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இப்படி செய்து விட்டேன். இனி இதுபோன்று தவறு செய்யமாட்டேன்’ என மன்னிப்பு கேட்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT