வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியான ஜான் பாஷா (33) சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நடைபாதையில் தங்கி வேலைபார்த்து வந்தார். கடந்த மே 23-ம் தேதி புது வண்ணாரப்பேட்டை ஏ.சி.ஸ்கீம் சாலையில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். போலீஸார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில், அவரை கழுத்தில் மிதித்து யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர்கள் கிருஷ்ணராஜ், சேகர்சிங் உள்ளிட்ட போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், திருநங்கையான மலேகா(40) என்பவர் ஜான் பாஷாவைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து நந்தினி என்ற மற்றொரு திருநங்கை அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் திருநங்கை மலேகாவை போலீஸார் கடந்த மே 27-ம் தேதி கைது செய்து விசாரித்தனர்.
அதில், ஜான் பாஷா அதிக பணம் வைத்திருப்பதைக் கண்ட திருநங்கை மலேகா, ஜான் பாஷாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஜான் பாஷா வரமறுத்து திட்டியதால் இருவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மலேகாவின் காதைப்பிடித்து ஜான்பாஷா இழுத்துள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜான்பாஷாவை கீழே பிடித்து தள்ளி, கழுத்தில் ஏறி மிதித்து அவரை கொலை செய்ததாக மலேகா வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து மலேகா சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு வழக்கறிஞர் ஆட்சேபம்: இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மலேகா, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது ‘‘அடிக்கடி இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் சென்னையில் நடைபெறுவதா ல் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட திருநங்கையான மலேகாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’’ என மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து மலேகாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.