க்ரைம்

சமூக வலைதளம் மூலம் போதைப் பொருள் விற்கும் கும்பல் - அதிரடி காட்டும் கோவை போலீஸ்

டி.ஜி.ரகுபதி

கோவையில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி தகவல்களை பரிமாற்றம் செய்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோாிக்கை எழுந்துள்ளது.

கோவையில் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்லும் இளைஞர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள், உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பதாக புகார்கள் தொடர்கின்றன. காவல் துறையினரும் போதைப் பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து கைது செய்தாலும், விற்பனை தொடர்கிறது. இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘சமீபத்திய காலமாக கோவையில் கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தொடர்கிறது. போலீஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி, வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமும், தனிப் போக்குவரத்து வாகனங்கள் மூலமும் போதைப் பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

ரயிலில் வந்தால் ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன்னரே தண்டவாளம் ஓரம் தூக்கிவீசிவிட்டு, ஸ்டேஷனில் இருந்து இறங்கி நடந்து வீசிய இடத்துக்குச் சென்று எடுத்துக்கொண்டு தப்புகின்றனர். போலீஸாரிடம் சிக்காமல் இருக்க, போதைப் பொருள் கும்பல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள பக்கங்களை விற்பனைக்காக பயன்படுத்துகின்றனர்.

வியாபாரிகள் தங்களது ஏஜென்ட்களாக உள்ள இளைஞர்கள் மூலம் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்களை அணுகுகின்றனர். தொகையை முதலில் ‘ஜி-பே’ மூலம் பெற்றுக் கொள்கின்றனர். ஏஜென்ட் கூறியபடி, இளைஞர்கள், மாணவர்கள் தங்களது இன்ஸ்டா கிராம் பக்கத்தின் வாயிலாக, போதைப்பொருள் வியாபாரியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்டு, குறியீடுகளை கூறி பேசுகின்றனர்.

பின்னர், கஞ்சா வியாபாரி லொகேஷனை வாடிக்கையாளருக்கு அனுப்புகிறார். வாடிக்கையாளர் அங்கு சென்று, ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எடுத்துக் கொள்கிறார். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர் போலி பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயன்படுத்துவதோடு, பொது இடங்களிலுள்ள ‘வை-பை’யை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிலர், வாட்ஸ் அப் குழுக்களை ஏற்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்து கஞ்சா விற்கின்றனர். விற்பனை முடிந்ததும் உடனடியாக அக்குழுவை கலைத்து விடுகின்றனர்’’ என்றனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும்போது, ‘‘தகவலாளிகள் மூலமும், ரகசிய தகவல்கள் மூலமும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையாளர்களை தொடர்ச்சியாக கண்டறிந்து கைது செய்து வருகிறோம். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகள், மேன்சன்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

காவலர்கள் மூலம் பல்வேறு பெயர்களில் இன்ஸ்டா கிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணித்தும் வியாபாரிகளை அடையாளம் கண்டு கைது செய்கிறோம். கோவை மாநகரில் நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 264 பேரை கைது செய்துள்ளோம். 168 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 ஆயிரம் போதை மாத்திரைகள், மெத்தபெட்டமைன் 504 கிராம், கொகைன் 92 கிராம்,ஹெராயின் 48 கிராம், ரூ.28 லட்சம் பணம், 32 இருசக்கர வாகனம், 9 நான்குசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களில் 29 பேரை குண்டாஸில் அடைத்துள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT