சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க கருங்குரங்குகள், ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு வந்த அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், இரண்டு பெரிய கூடைகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது அதில், ஆப்பிரிக்க நாட்டின் அரிய வகை 2 கருங்குரங்குகள், அரிய வகை ஆமைகள் 7 இருந்தன.
அரிய வகை உயிரினங்களை முறையான ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்று இல்லாமல் கொண்டு வந்ததால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தாய்லாந்துக்கு விமானத்தில் திருப்பி அனுப்பினர். அதற்கான செலவு தொகை, அவற்றை கொண்டுவந்த நபரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. பின்னர், அதிகாரிகள் அவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.