தமிழழகன் 
க்ரைம்

கரூரில் கைது செய்ய சென்ற போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய சென்ற போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்டார்.

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழழகன் (31). இவர் நேற்று அவரது நண்பர்களான பிரகாஷ் (25), ஹரிஹரன் (30), மனோஜ் (25) ஆகியோருடன் குடிபோதையில் கரூர் லைட்ஹவுஸ் முனை பகுதியில் சுக்காலியூரை சேர்ந்த மலையாளம் (51) என்பவருடன் வீண் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பென்சில் தமிழழகன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் சேலம் புறவழிச்சாலை பகுதியில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு அரிக்காரம்பாளையம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பென்சில் என்கிற தமிழழகன் மறைந்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீஸார் தமிழழகனை பிடிக்க சென்றப்போது தமிழழகன் அவர் வைத்திருந்த ஒண்ணே முக்காலடி வாளால் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அவரது துப்பாக்கியால் தப்பியோடிய தமிழழகனின் காலில் சுட்டு அவரைப் பிடித்து கைது செய்தார்.

காயமடைந்த தமிழழகன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கரூரில் ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழழகன் மீது கரூர் மாவட்டத்தில் 13 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 வழக்கும் உள்ளது. மேலும் இவர் சி பிரிவைச் சேர்ந்த ரவுடியாவார்.

SCROLL FOR NEXT