சென்னை: வீடு புகுந்து மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட முகமூடி பெண் கைது செய்யப்பட்டார். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் அனுசுயா (30).
இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, யாரோ வீட்டின் அழைப்பு மணியை தொடர்ந்து அழுத்தும் சத்தம் கேட்டதால், கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அங்கு முகமூடி அணிந்தபடி நின்றிருந்த நபர், அனுசுயாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவரது கழுத்திலிருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றார்.
உடனே சுதாரித்துக் கொண்ட அனுசுயா தங்க செயினை இறுகப் பிடித்துக் கொண்டு `திருடன்... திருடன்...' எனக் கூச்சலிட்டார். இதையடுத்து, நகை பறிப்பில் ஈடுபட முயன்ற நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முகமூடி அணிந்து நகை பறிப்பில் ஈடுபட்டது ஆண் அல்ல பெண் என்பதும், அவர் தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த அய்யம்மாள் என்ற அம்லு (36) என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர் அனுசுயாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருவதும், அனுசுயா தனியாக இருப்பதை அறிந்து வீடு புகுந்து நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.