மதுரை: கூடுதல் டிஜிபி கைது விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மதுரை பெண் காவலருக்கு மேலும் சில வழக்குகளில் தொடர்பு இருக்கும் நிலையில், 15 நாட்களுக்கு முன்பு அவரது சிலைமான் முகவரிக்கு சம்மன் வந்தது தெரியவந்துள்ளது.
காதல் திருமண விவகாரத்தில் 17 வயது சிறுவனை கடத்துவதற்கு சென்னை கூடுதல் டிஜிபி ஜெயராமின் வாகனத்தை பயன்படுத்தியாக அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மதுரை பெண் காவலர் மகேஸ்வரிக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. மதுரை மாவட்டம் கீழ சிலைமானைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், சில ஆண்டுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழநி பட்டாலியனில் பணிபுரிந்தபோது போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரின் பேரில் மகேஸ்வரி பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் காவல் துறையில் சில உயர் அதிகாரிகளின் செல்வாக்கில் வலம் வந்த அவர், கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் பண்ணைத் தோட்டம் ஒன்றை வாங்கி, அதில் தங்கியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட நட்பினால் சில காரியங்களைச் செய்து கொடுப்பதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று சில மோசடி வழக்கிலும் சிக்கினார். இந்நிலையில், தேனியைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவியின் காதல் திருமண விவகாரத்தில் அவரது தந்தையான தொழிலதிபருக்கு உதவி செய்வதாகப் பணம் பெற்றுள்ளார். இதற்கு கூடுதல் டிஜிபி ஜெயராமின் உதவியை மகேஸ்வரி நாடினார். அதில் தற்போது கூடுதல் டிஜிபி சிக்கியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “தொடக்க காலத்தில் மகேஸ்வரி, மணலூர் அருகிலுள்ள கீழச் சிலைமானில் பெற்றோருடன் வசித்தார். இங்கிருக்கும்போது அவர் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார். அவர் சில வழக்கிலும் சிக்கியதாகத் தகவல் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக வெளிமாவட்ட காவல்துறையினர், சிலைமான் முகவரிக்கு அவருக்கு சம்மன் கொண்டு வந்திருந்தனர். அவர் அந்த முகவரியில் இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து மகேஸ்வரிக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையத்தில் வந்து அவர் சம்மனைப் பெற்றுக் கொண்டார். மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் வேறு எந்தெந்த வழக்குகளில் சிக்கியுள்ளார் என்பது பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறோம்” என்றனர்.