கயத்தாறு: குளிர்பானம் ஏற்றி வந்த வாகனத்தில் புகையிலை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் இன்று மதியம் கயத்தாறு அருகே சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். குளிர்பானங்கள் ஏற்றி வந்த அந்த வாகனத்தில், குளிர்பானங்களுக்கு கீழ் பகுதியில் 30 மூட்டைகள் இருந்தன. அவற்றை எடுத்து பார்த்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.4.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
புகையிலை பொருட்கள் கடத்தியதாக ஆறுமுகநேரி அருகே உள்ள ராஜமணியபுரத்தைச் சேர்ந்த ஆனந்த ராஜகுரு (39), எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தியைச் சேர்ந்த ரவிக்குமார் (21), ஈரோட்டைச் சேர்ந்த கோபிநாத் (31), வாகன ஓட்டுநர் ஈரோடு நாசினூரைச் சேர்ந்த முருகேசன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து அவர்கள் புகையிலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.