பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

சென்னையில் சைபர் குற்ற கும்பல்களிடம் இருந்து 5 மாதங்களில் ரூ.10 கோடி மீட்பு; ரூ.48 கோடி முடக்கம்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சைபர் குற்றக் கும்பல்களிடம் இருந்து கடந்த 5 மாதங்களில் ரூ.10 கோடியை மீட்ட சென்னை போலீஸார் உரியவர்களிடம் அந்த தொகையை ஒப்படைத்துள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் கைது, ஆன்லைன் பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி, வாட்ஸ்அப் ஹேக்கிங் உள்பட பல்வேறு வகையான மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த வகை மோசடி மூலம் பொது மக்களின் கோடிக்கணக்கான பணமும் சுருட்டப்படுகிறது. சைபர் மோசடியை தடுக்கவும், பொது மக்கள் இழந்த பணத்தை மீட்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சென்னை காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் சைபர் க்ரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக சென்னையில் உள்ள 4 மண்டலங்களிலும் சைபர் க்ரைம் பிரிவு பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இவற்றில் எங்கேனும் புகார் தெரிவித்தால் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்குதல், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சைபர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தல் ஆகிய பணிகளை சைபர் க்ரைம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டு ஜனவரி 1 முதல் கடந்த மே 31-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல்துறையில் நிதி இழப்பு தொடர்பான 4,357 சைபர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. சைபர் கும்பலிடம் ரூ.218.45 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர். இவற்றில் ரூ.48 கோடியை உடனடி நடவடிக்கை மூலம் முடக்கிய போலீஸார் ரூ.10.45 கோடியை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், சைபர் க்ரைம் மோசடி தொடர்பாக 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 42 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 17 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் கூறுகையில், “எந்தவொரு சைபர் குற்றங்கள் குறித்தும் அருகிலுள்ள சைபர் குற்ற காவல் நிலையத்தில் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும். நிதி இழப்பு ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற முகவரியில் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT