க்ரைம்

அரியலூர்: நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி 12 பேர் காயம்

பெ.பாரதி

அரியலூர்: அரியலூரில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதியதில் 12 பேர் காயமடைந்தனர்.

காரைக்காலிலிருந்து சிமென்ட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருளான கரியை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று அரியலூர் நோக்கி நேற்று இரவு 10.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அரியலூர் தற்காலிக பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் ஏறும்போது லாரி திடீரென பழுதாகி நின்றுள்ளது.

இரவு நேரம் என்பதால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் லாரி பழுதாகி நின்று கொண்டிருப்பதை உணர்த்தும் விதமாக எந்த விதமான எச்சரிக்கை பலகையும் அப்பகுதியில் வைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், தஞ்சாவூரிலிருந்து சேலம் செல்வதற்காக அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் ஓட்டுநர் பழனிசாமி, நடத்துநர் உத்திராபதி, 11 வயது சிறுவன் உள்ளிட்ட 12 பேர் காயம் அடைந்த நிலையில், காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அரியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT