நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில், 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, திருநெல்வேலி நீதிமன்றம் 17 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கூடங்குளம் அருகே கூத்தங்குழி கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அப்பகுதியை சேர்ந்த ரீகன் (22), கணேசன் ஆகிய இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒன்றரை மாதத்துக்குப் பின் விஜயாபதியில் உள்ள ஓட்டலில் இவ்விரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி விஜயாபதி அருகே ரீகனை வழி மறித்த ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது.
இது தொடர்பாக, கூத்தங்குழி சிலுவை அந்தோனி (68), அவரது மகன்கள் கணேசன் (40), சிம்பு (39), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜான் பால் (42), அன்டன் (49), வினோத் (42), அருள் சகாய ராஜ் (46), ஏரோணிமூஸ் மகன் அன்டன் (44), ஜேம்ஸ் (40), மைக்கேல் (44), யாகப்பன் (27), பச்சாலி (66), ஹெர்குலஸ் (39), சகாயம் (52), சக்கரியாஸ் (57), அருள்தாஸ் (39), ஆன்றனி மைக்கேல் (39), மிக்கேல் அந்தோனி (39), ஹால்டன் (31) ஆகிய 19 பேரை, கூடங்குளம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை காலத்தில் யாகப்பன், சக்கரியாஸ், ஹால்டன் ஆகியோர் இறந்துவிட்டனர். கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. சிலுவை அந்தோனி, கணேசன், சிம்பு, ஜான்பால், வினோத், அருள் சகாயராஜ், ஏ.அன்டன், ஜேம்ஸ், மைக்கேல், மிக்கேல் அந்தோனி ஆகிய 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து, நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் தீர்ப்பு கூறினார். மற்ற 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.