ஏடிஜிபி ஜெயராம் | கோப்புப்படம் 
க்ரைம்

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமிடம் போலீஸார் தீவிர விசாரணை

இரா.நாகராஜன்

திருத்தணி: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக ஏடிஜிபி ஜெயராமிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று (ஜூன் 16) நீதிமன்ற வளாகத்தில் ஏடிஜிபி ஜெயராம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஏடிஜிபி ஜெயராமிடம் இரவு 8.30 மணி முதல் இன்று (ஜூன் 17) அதிகாலை 2.30 மணிவரை திருவள்ளூர், திருத்தணி டிஎஸ்பிக்கள் தமிழரசி, கந்தன், இன்ஸ்பெக்டர் நரேஷ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வீடியோ பதிவுடன் நடந்த அவ்விசாரணையில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியுடன் உங்களுக்கு எத்தனை ஆண்டுகள் பழக்கம்? முன்னாள் போலீஸ்காரர் மகேஸ்வரியை எப்படி உங்களுக்கு தெரியும்? சிறுவனை கடத்த அரசு வாகனத்தை அளித்தது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு, பதில்களை பதிவு செய்தனர். தொடர்ந்து, திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் போலீஸார் இன்று காலை முதல் மதியம் வரை தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

பிறகு, மதியம் 3 மணியளவில் திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே காவல் நிலையத்தில் மற்றொரு அறையில், பூவை ஜெகன் மூர்த்தியிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT