கோவை: கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க 89 தனிப்படைகள் அமைத்து போலீஸார் 3 நாட்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில், கஞ்சா பதுக்கியிருந்த 36 பேர் சிக்கினர்.
போதைப் பொருள் புழக்கம் இல்லாத கோவையை உருவாக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ‘ஆப்ரேஷன் டிரக் ஃப்ரீ கோவை’ என்ற தலைப்பில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 300 பேர் கொண்ட 89 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த குழுக்களை சேர்ந்த காவலர்கள் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதியான வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகள், போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்ற தகவலின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட நபர்களின் வீடுகள், இளைஞர்கள் அறை எடுத்து தங்குமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, “சோதனை குறித்த தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 761 நபர்கள் தேடுதல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 289 பேர் தற்போது மாவட்டத்தில் வசிப்பதில்லை என்பதும், 11 பேர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 461 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களிடம் இருந்து 10 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா யார் வாங்கிக் கொடுத்தது, அதை வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் யார் என விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, “போதைப் பொருட்கள் போன்ற சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் போலீஸாரிடம் இருந்து தப்ப முடியாது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் இத்தகைய தவறுகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும்” என்றார்.