புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் தாய், குழந்தை உயிரிழந்ததை மறைத்து பணம் பறிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் மருத்துவரை கைது செய்த போலீஸார், மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
குஷிநகரின் கத்தா நகர் பகுதியில் கத்தா-நெபுவா சாலையில் உள்ள மஹாராணா பிரதாப் சவுக் பகுதியில் அமைந்துள்ளது விப்ராந்த் மருத்துவமனை. இங்கு பிரசவ வலியால், அஸ்மா காத்தூன் (25) கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர், குஷிநகரின் ஹனுமன்கஞ்ச் காவல் நிலையப் பகுதியின் ராம்பூர் ஜங்கிள் கிராமத்தில் வசிக்கும் சிக்கந்தர் என்பவரின் மனைவி ஆவார். அஸ்மாவுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன்பிறகு, மருத்துவமனை ஊழியர்கள் போக்கு மெல்ல மாறத் துவங்கி உள்ளது. திடீர் பிரச்சினையால் அஸ்மாவுக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும், இதை வெளியிலிருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதற்காக அஸ்மாவின் உறவினர்களிடம் கூடுதல் பணம் கேட்டும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பணம் கிடைக்காது என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அஸ்மாவை அருகிலுள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
ஆனால், உண்மையில் அறுவை சிகிச்சையினால் அஸ்மா மற்றும் அவரது குழந்தையின் உயிர் பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இதை முற்றிலும் மறைத்து விப்ராந்த் மருத்துவமனையினர் அஸ்மாவின் உறவினர்களிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்று கூறிக்கொண்ட டாக்டர் சையது முகம்மது, தாயும் குழந்தையும் உயிருடன் இருப்பதாக போலியாக உறுதியளித்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
அதேசமயம், குடும்பத்தினர் சந்தேகப்பட்டபடி அங்கிருந்து டாக்டர் சையத் தனது காரில் தப்பிச் செல்ல முயன்றார். அவரைப் பிடித்து வைத்த அஸ்மாவின் குடும்பத்தினர், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அஸ்மாவின் மறைவால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே உடல்களை வைத்து போராட்டம் நடத்தத் துவங்கினர். தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த போலீஸார் விசாரணை துவங்கினர்.
இந்த விசாரணையில் அஸ்மாவின் குடும்பத்தினர் கூறுவதில் உண்மை இருப்பதை போலீஸார் உணர்ந்தனர். பிறகு குஷிநகரின் சார் ஆட்சியர் முகம்மது ஜாபரும் அங்கு வரவழக்கப்பட்டு விசாரணை நடத்தினார்.
மருத்துவர் சையத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விப்ராந்த் மருத்துவமனையின் உரிமங்களையும் பரிசோதித்தபோது, அது அரசு அனுமதியின்றி செயல்படுவதும் தெரிய வந்துள்ளது. இதனால், விப்ராந்த் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனையடுத்து அந்த மருத்துவமனைக்கு சார் ஆட்சியர் முகம்மது ஜாபர் சீல் வைத்தார்.