க்ரைம்

மதுரை வி.சத்திரப்பட்டி காவல் நிலையம் சூறை, காவலர் சிறை வைப்பு சம்பவம்: இரண்டு ரவுடிகள் கைது

என்.சன்னாசி

மதுரை: திருமங்கலம் அருகே வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சூறையாடி, தலைமைக் காவலர் சிறை வைக்கப்பட்ட சம்பவத்தில் இரு ரவுடிகளை தனிப்படை போலீஸார் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் வி.சத்திரபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் இருந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபாகரன் மீதான வழக்கு ஒன்று தொடர்பாக திண்டுக்கல் போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த அவருடைய தந்தை முத்துவேலுவிடம் விசாரித்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இதன்பிறகு வீட்டுக்கு வந்த பிரபாகரன் போலீஸார் வந்த விவரத்தை அறிந்து கோபமடைந்துள்ளார். உடனே அவர் தனது நண்பருடன் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் சென்றுள்ளார்.

அங்கு இரவுப் பணியில் இருந்த தலைமைக்காவலர் பால்பாண்டியிடம் வாக்குவாதம் செய்து, காவல் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை சூறையாடியுள்ளனர். தலைமைக் காவலர் பால்பாண்டியை காவல் நிலையத்திற்குள் சிறை வைத்துவிட்டு தப்பியுள்ளார். பிற காவல் துறையினரால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளான பிரபாகரன் அவரது நண்பரை பிடிக்க, டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தீவிர தேடுதலில் பிரபாகரன், அவரது நண்பர் அய்யனார் ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்கள் திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT