க்ரைம்

கார் ஒட்டுநர் கொலை வழக்கு: 6 பேரை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

மகளுடன் தகாத உறவில் இருந்ததாக வந்த வதந்தியின் காரணமாக கார் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, சகோதரன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் எழில் தீபாவுடன், கார் ஓட்டுநர் பாபு தகாத உறவில் இருந்ததாக, மற்றொரு ஓட்டுநர் கண்ணன், கிருஷ்ணமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் தீபக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோர் கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், ஜான், செந்தில் ஆகியோர் உதவியுடன் கடந்த 2010-ம் ஆண்டு பாபுவின் ஆணுறுப்பை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் 6 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

SCROLL FOR NEXT