கொரடாச்சேரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, நீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சுதா(40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், சுதா பாண்டவையாறு கரையில் நேற்று மதியம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன்(43), அஜித் குமார்(30) ஆகியோர் சுதாவிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதுடன், அவரை அருகில் இருந்த பாண்டவையாற்றில் நீரில் மூழ்கடித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதாவை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கொரடாச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி, தப்பியோடிய முருகன், அஜித் குமார் ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாண்டவையாறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும், உச்சகட்டமாக தற்போது பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.