கோவை அருகே காரை வழிமறித்து நகை வியாபாரியிடம் 1.25 கிலோ தங்கக் கட்டியை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பாலக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப்(55). இவர், பாலக்கல் கிராமத்தில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் சென்னையில் தங்கக் கட்டிகளை வாங்கிச் சென்று ஆபரணங்களாக வடிவமைத்து, விற்பனை செய்வது வழக்கம். இதற்காக, ஜெய்சன் ஜேக்கப், கடை ஊழியர் திருச்சூர் விஷ்ணு(20) ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை சென்று 1.25 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிக்கொண்டு, ரயில் மூலம் நேற்று காலை கோவைக்கு வந்தனர்.
பின்னர், கோவையில் இருந்து கார் மூலம் திருச்சூர் புறப்பட்டனர். காரை விஷ்ணு ஓட்டினார். கோகை க.க.சாவடி அடுத்த எட்டிமடை பகுதியில் வந்தபோது திடீரென ஒரு லாரி சாலையின் குறுக்கே திரும்பியது. இதனால் விஷ்ணு காரை நிறுத்தினார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த 5 பேர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டியும், பெப்பர் ஸ்பிரேவை அடித்தும், ஜெய்சன் ஜேக்கப் வைத்திருந்த தங்கக் கட்டிகளை கொள்ளையடித்தனர். பின்னர், 2 கி.மீ. தொலைவுக்கு காரையும் கடத்திச் சென்று, அங்கு ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணுவை கீழே இறக்கிவிட்டு, காருடன் தப்பிச் சென்றனர்.
பின்னர் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மூலமாக க.க.சாவடி போலீஸாுக்கு தகவல் தரப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார் அங்கு சென்று, இருவரிடமும் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கக் கட்டியின் மதிப்பு ரூ.1.32 கோடி.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, ‘‘கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.