நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட வழக்கில், கோவையைச் சேர்ந்த முக்கிய நபரை புதுச்சேரி போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் அசோகன் (70). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவரை 2023-ல் தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அசோகன் `ஆஷ்பே' என்ற இணையதளம் மூலம் ரூ. 98 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் கிடைத்த ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சியை விற்று, தனது வங்கிக் கணக்குக்கு பணமாக மாற்ற முயன்றபோது, இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அசோகன், இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் நடத்தி விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேர் ரூ.2.50 கோடியை இழந்துள்ளதும், நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலீஸார் கோவையைச் சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40), ஆஷ்பே என்ற இணையதளத்தை உருவாக்கிய தாமோதரன் (52), வழக்கின் முக்கிய நபரான பாபு (எ) சையது உஸ்மான் (51) ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்ரான் பாஷா (37) என்பவரை போலீஸார் பெங்களூரில் கைது செய்தனர். பின்னர், அவரை நேற்று புதுச்சேரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.